ராஜராஜ சோழன் வரலாறு கிபி 985 முதல் 1014 வரை
உத்தம சோழன் இறந்த பின் அவரது மகன் மதுராந்தகன் மன்னர் ஆகவில்லை மாறாக இரண்டாம் பராந்தனுக்கும்(சுந்தர சோழன்)  சேர நாட்டு இளவரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த அருண்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்) அரசு கட்டில் ஏறினான்.  தந்தையிடமிருந்து ஆட்சியில் பங்கேற்று,  அறிவுத் தெளிவும்,  அரசாங்க விவேகமும்,  நிர்வாகத் திறமையும்  போர் அனுபவம் பெற்றிருந்த  அருண்மொழிவர்மன் என்கிற   இராசராசன் புதிய சகாப்தம் படைத்தார்.  இவரது ஆட்சிக்காலம் சோழர் வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  சோழப் பேரரசு புதிய பரிமாணங்களுடன் பிரகாசித்தது.  இராசராசன் சோழர்களின் இரண்டாவது பேரரசை உருவாக்கினார்.  நாகராசன் வழிவந்தவர்கள் பிற்கால சோழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
 
பிற்கால சோழர்  வரலாற்றுக்கு அடித்தளமிட்ட விஜயாலய சோழர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரை  கைப்பற்றி.  தஞ்சாவூரை  தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்தார்.  இவர் பல போர்களில் வெற்றி பெற்று சோழர்களின் ஆட்சிக்கு நிலைத்தன்மையை கொடுத்தார். இராசராச சோழன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு சோழ நாட்டு அரசியலில் தெளிவற்ற நிலை   நீடித்தாலும் இவர் ஆட்சிக்கு  வந்த பின்பு   சோழர் மரபும்,  நிர்வாகமும் ராணுவமும் நிலைபெறச் செய்தார்.  அரசாங்க அமைப்பு,  தரைப்படையும்,  கடற்படை   விரிவாக்கத்துக்கான உட்கட்டமைப்பும்  ஏற்படுத்தப்பட்டது.  இக்கட்டமைப்பு கொண்டு  வலிமைமிக்க  பேரரசை உருவாக்கிய பெருமை   இராசராசனை சேரும். இவர் பல போர்களில் புரிந்து சோழப் பேரரசை விரிவுபடுத்தினர்.  இராசராசனின்  போர் வெற்றிகள் மிகவும் புகழ்பெற்றவை.
 
இராசராசன் பிறந்தநாள்
சுந்தரசோழன் ஆகிய இரண்டாம் பராந்தகன் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் இராசகேசரி முதலாம் இராசராசன்.  இவர் கிபி 985 ஜூன் திங்கள் இருபத்தி ஐந்தாம் நாள் அரசு கட்டில் ஏறினான்.
இராசராசன் சிறப்பு
விசயாலய சோழன் பின்வந்த சோழர்களின் சோழப்  பேரரத்தை சிறப்புற அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசன் ஆவார்.  இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது எனின்,  இவன் இட்ட அடிப்படை எவ்வளவு உறுதி வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்!  இராசராசன் தந்தையிடமிருந்து சிற்றப்பன் இடமிருந்தும் அரசியல் அமைப்புகளை அறிந்தான்.  தான் பட்டம் பெற்ற பின்பு  இன்னின்ன வேலைகளை செய்து சோழப்பேரரசை உண்டாக்குதல் வேண்டுமென்று முன்னமே திட்டம் செய்திருந்தான்;  பட்டம்  பெற்ற  பின்னர் அத்திட்டத்தை செவ்வனே நிறைவேற்றி வெற்றி கண்டான்.  இவனது ஆட்சிக் காலத்திலேயே இவன் தன் மைந்தனான இராஜேந்திரனை பெருவீரனாக்கிவிட்டமை  பாராட்டுக்குரியது.   இராசேந்திரன் கடற்படை செலுத்தி கடாரம்  கைக்கொண்டான்!  இராசராசன்   ஆண்டகாலம் சோழர்  வரலாற்றின் பொற்காலம் எனலாம்.
 
இவனது ஆட்சியில் ஓவியம்,  சிற்பம், நாடகம்,  நடனம்,  இசை,  இலக்கியம் இன்ன பிறவும் நன்கு  வளரத் தொடங்கின.  இவன் காலத்திலேயே தேவாரத் திருமுறைகள் நாடு பரவின;  சைவ சமயம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.   சோழப்  பேரரசை உண்டாக்கப் பெரும் படை திரட்டியவன் இராசராசனே ஆவான்;  அப்படை இவன் நினைத்தது யாவும் தடையின்றி செய்துவந்தது பாராட்டுக்குரியது.  அரசியல் அமைப்பை  திடம்பெற  அமைத்தவனும் இராசராசனே ஆவான்.  நாகரீகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கு  எள்ளளவும் வேறுபாடு இல்லை.  இராஷ்டிரகூடர்   படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு இராசராசன் காலத்தில்  கிருஷ்ணா நதி வரை பரவியது  மேற்கே அரபிக்கடல் வரை பரவியது.  தெற்கே இலங்கை வரை பரவியது  எனின்,  இவன் சிறப்பை அறியலாம்.  தஞ்சை பெரிய கோவில்  உள்ள சுவர் மீது உள்ள ஓவியம் இராசராசன் ஓவியமாக  இருத்தல் வேண்டும்.
 
இராசராசன் திருவுருவமும் கோப்பெருந்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர் கோவிலில் இருக்கின்றன.  இவனைப் பற்றி கூறும்பொழுது இராசராசன் அரசியலில் பண்பட்ட அறிவுடையவன்,  சிறந்த  போர்த் தொழிலில் வல்லவன்;  சமயப்பற்று உடையவன்;   பேரரசை  உண்டாக்கும் தகுதி மற்றும் பொருந்த பெற்றவன் எனலாம்.  சோழர் வரலாற்றை இன்று நாம் அறிந்து இன்புற  வழிவகுத்தவன்.
 
இராசராசன்  மனைவிகள் மற்றும் மகன்  மகள்கள்
இராசராசனுக்கு உலகமாதேவியார், சோழமாதேவியார், இலாட மாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தனர்.  இவனுக்கு  ராஜேந்திரன்   என்னும் மகனும் குந்தவை,  மாதேவடிகள் என்னும் பெண் மகளும் இருந்தனர்.
 
மெய்க்கீர்த்தி
பிற்கால சோழர் மரபுக்கு முற்பட்ட பல்லவர்,  பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுக்களும் பல கிடைத்துள்ளன.  அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும்.  அந்தந்த அரசர் சிறப்பு சிறிதளவே கூறப்பட்டிருக்கும்;   முற்றும்  கூற பட்டிருக்காது;  விளக்கமாகவும் கூறப்பட்டு இருக்காது.  இம்முறையே விசயாலயன் வழிவந்த ஒரு பின்பற்றி வந்தனர்.  ஆனால் இராசராசன் இந்த முறையை அடியோடு மாற்றி விட்டான்;  தனது ஆட்சி ஆண்டுகளில் முறையே நடைபெற்ற  போர் செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுக்களில் முறைப்படி குறித்து வரலானான்.  சான்றாக ஒன்று கூறுவோம்: இராசராசன் முதலில் கந்தலூர் சாலையில் கலம் அறுத்தான்.  வெற்றியே இவன் கல்வெட்டுக்களின் முதல் இடம் பெற்றது.  இதன்பின்னர் செய்த போர்  இரண்டாம் இடம் பெற்றது.  இப்படியே ஒன்றின் பின் ஒன்றாக முறைப்படி குறிக்கப்பட்டன.  இங்கனம்  இவன் ஒழுங்கு பெற குறித்தவையே இக்கால அரசர்களும் பின்பற்றினர்.  அக் குறிப்புகளை இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன.  பட்டயம் அல்லது கல்வெட்டு தொடக்கமாக ஒரு தொடரை அழகாக  வைத்தவரும் இராசராசன் ஆவான். ‘ இஃது இவனது பட்டையும் அல்லது கல்வெட்டு’ என்று எளிதில் கூறிவிட தக்கவாறு இத்தொடக்கம் இருக்கிறது.  அது ‘திருமகள் போல…’ என்பதாகும்.  இவனது வீர  மகனான இராஜேந்திரன்  கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை.  இங்கனம் பின்வந்த பட்டயங்களும் கல்வெட்டுக்களும் வெவ்வேறு தொடக்கம் கொண்டவை.  இத்தகைய ஒழுங்கு  முறையை  அமைத்த இப் பேரரசன்  அறிவாற்றலை என்னவென்று பாராட்டுவது.
 
விருதுப் பெயர்கள்
ராஜராஜன், காந்தலூர் கொண்டான், அழகிய சோழன், மும்முடிச்சோழன், ராஜ சர்வக்ஞன், சோழநாராயணன், அபயகுலசேகரன், அரித்துர்க்கலங்கன், அருள் மொழி, ரணமுக பீமன், ரவி வம்ச சிகாமணி, ராஜ பாண்டியன், ராஜ கேசரிவர்மன், சோழேந்திர சிம்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜ விநோதன், உத்தம சோழன், உத்துக துங்கன், உய்யக் கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்ட பராக்கிரமன், சத்ருபுஜங்கன், சிங்கனாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், திருமுறை கண்ட சோழன், ஜன நாதன், ஜெயகொண்ட சோழன், தெலிங்க குலகாலன், நித்ய விநோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மூர்த்தி விக்கிரமா பரணன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன் என பல விருதுப்  பெயர்களை இராஜராஜன் பெற்றிருந்தான்.
 
சுற்றுப்புற நாடுகள்
இராசராசன் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசு வடக்கில் தொண்டைநாடு வரையும் தெற்கில் பாண்டிய நாடு வட எல்லை வரையுமே பரவியிருந்ததுச  எனவே,  வடக்கு கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது;  தெற்கே பாண்டிய நாடு தனித்து இருந்தது;   மேற்கே சேரநாடு, கங்க நாடு,  குடகு, நுளம்பாடி,  தடிகை பாடி,  மேல் கடற்கரை நாடு முதலியன தனித்தனி சிற்றரசர்களாக இருந்தனர்.   வடமேற்கே இராட்டிரகூடரை அழித்துப் புதிய பேரரசை   இரட்டபாடியில்  அமைத்த மேலைச் சாளுக்கியர் ஆண்டுவந்தனர்.  இலங்கையில் ஐந்தாம் மகிந்தன் ஆண்டுவந்தான்.
 
ராஜராஜ சோழன் போர்கள்
காந்தளூர் சாலைப் போர்
இராசராச சோழன்  பதவியேற்ற பின்பு  இவர்களது பகைவர்களான   சேரர்  பாண்டியர்,  சிங்களர்களை வெற்றி பெறும் நோக்குடன் நிலையான படையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  எட்டாண்டு கால ஏற்பாட்டுக்கு பின்னர் படையெடுப்புகளுக்கு தயாரானார்.
 
இராசராச சோழன் முதற்கட்டமாக சேர நாட்டின் மீது படையெடுக்கும் நோக்குடன்  சேர நாட்டின்  கடற்படை என்பதால்  மிக பலமான கடற்படையை  உருவாக்கினார்.   தனது திட்டத்தின்படி,   தான் அனுப்பிய  தூதுவரை சேரமன்னன் பாஸ்கர  ரவிவர்மன்  கைது செய்து விட்டமையால் சேர நாட்டின் மீது படையெடுத்தார்.  திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர் சாலை என்னுமிடத்தில் போர் மூண்டது.  இப்போரின் விளைவாக சேரநாட்டின் கடற்படை அளிக்கப்பட்டது.  அத்தோடு சேர நாட்டின் ராணுவப் பயிற்சிப் பள்ளியும் தரைமட்டமாக்கப்பட்டது.  சேரமன்னன் பாஸ்கர ரவி வர்மன் அவருக்கு துணையாக இருந்த பாண்டிய மன்னன் அமரபுஜங்கனும்  தோல்வியை தழுவினர்.   இராசராசன்  சோழ  சேர பாண்டியர்களின்  மும்முடியையும்  சூடிக்  கொண்டதால் மும்முடிச்சோழன் எனப்பட்டார்.  இப்போர்   சேர நாட்டின் கடற்படை அழிக்கும் நோக்குடன்  மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
 
 சேரமன்னன் பாஸ்கர ரவி வர்மன்   கொல்லத்துக்கு தப்பிச்  சென்றதால்   கொல்லமும்  தாக்கப்பட்டது.  கைப்பற்றப்பட்ட கந்தலூர் மற்றும்  கொல்லம் பகுதிகளில் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.  அங்கிருந்த  வேத பள்ளிகளுக்கு உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன.  சேர நாட்டில் சதயம் திருவிழாவும்  துவங்கப்பட்டது. காந்தளூர் சாலைப் போர் வெற்றி அருள்மொழிவர்மனுக்கு  இராசராசன்  என்ற  பெயரை சிதம்பரம் கோவில் நிர்வாகிகள் கொடுத்ததாக மரபு வழி செய்திகள் கூறுகின்றன.
 
பாண்டியருடன் போர்
காந்தளூர் சாலைப் போரில் பாண்டிய மன்னன்  அமரபுஜங்கன் சேர மன்னன்  பாஸ்கர ரவிவர்மனுக்குத்  துணையாக இருந்தார்,  எனவே பகைவனின் நண்பன் தனக்கு எதிரி எனக் கருதிய  இராசராசன் பாண்டிய மன்னனுக்கு பாடம் கற்பிக்கும் பொருட்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார்.  இப்போரில் பாண்டிய மன்னன் அமரபுஜங்கன் தோற்கடிக்கப்பட்டார்.  பாண்டிய நாடு சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.  இவ்வெற்றியை பாராட்டும் வகையில் இராசராசனுக்கு தென்ன பராக்கிரமன் என்ற விருது பெயர் சூட்டப்பட்டது.  இவற்றின் மூலம் பாண்டிய நாட்டின் மீது சோழர் ஆதிக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது.
 
மலைநாட்டு படையெடுப்பு
பாண்டியனை வெற்றி கொண்ட  இராசராசன்  மலைநாடு அல்லது குடமலைநாடு  அல்லது குடகு என அழைக்கப்படும் பகுதி மீது படையெடுத்தார்.  இப்படையெடுப்பின் நோக்கம் சேரும்,  பாண்டியரும் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.  அதேபோன்று கொங்கு நாட்டுக்கு அருகாமையிலிருந்த  நுனம்பாடி கைப்பற்றப்பட்டது. அதோடு கங்கபாடி,  தடிகைபாடி,  தலைக்காடு ஆகிய  மைசூர்  பகுதிகளும் கைப்பற்றப்பட்டன.  படையெடுப்புகள் எல்லாம் இராசராசன் பட்டத்து இளவரசன் ராஜேந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.     இவ்வெற்றிக்கு காரணமான ராஜேந்திரனுக்கு மாதண்ட நாயகர் என்ற பொறுப்புமிக்க பதவியை  அளித்து பெருமைப்படுத்தினார்  இராசராசன்.
 
இலங்கைப் படையெடுப்பு
சேரர், பாண்டியரைப் போன்றுஇலங்கை சிங்களவரும்சோழர்களுக்கு பரம்பரை பகைவர்கள்எப்பொழுதெல்லாம் சோழர்கள் சேரர்கள் மற்றும் பாண்டியர்களுடன் போரிட்டனரோ அப்போதெல்லாம் சிங்களர்கள் பாண்டியர்கள் ஆதரித்தனர். இதன் காரணமாக  இராசராசன் இலங்கையை வென்று,  சோழ நாட்டுடன்  இணைத்து சிங்களர் எதிர்ப்புக்கு நிரந்தரமாக முடிவுகட்ட தீர்மானித்தார்.  அதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார்.
 
இலங்கை மன்னன் ஐந்தாம் மகேந்திரனுக்கு எதிராக அவரது படையினரே கிளர்ச்சி செய்தனர் இக்கிளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத  இலங்கை அரசன் இலங்கையில் இருந்து தப்பி பாண்டிய நாட்டுக்கு வந்தார்.  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இராசராசன்.  இலங்கை மீது படை எடுத்தார்.  ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தலைநகரான அனுராதபுரம்   கைப்பற்றப்பட்டது.  அதை எடுத்து இலங்கையின் வடக்குப்    பகுதியும் விழ்ந்தது.  அப்பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டது.  இராணுவ காவல்  தலைநகராக இருந்த பொலனருவை இப்புதிய மண்டலத்தின்   தலைநகரம் ஆக்கப்பட்டது.  இந்நகருக்கு ஜெகநாதன் மங்கலம் என்று பெயரிடப்பட்டது.  இங்கு ஒரு சிவன் கோவிலும் கட்டப்பட்டது.  இதன்மூலம் இலங்கையின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.  இலங்கை வெற்றியின் விளைவாக சேர பாண்டிய இலங்கை இராணுவ கூட்டமைப்பு முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது.
 
சாளுக்கிய போர்
ராஷ்டிரகூடர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி  செய்தனர்.  மேலைச் சாளுக்கியர் கல்யாணியைத்  தலைநகரமாகக் கொண்டும்,  கீழைச் சாளுக்கியர்   வேங்கியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
 
 தைலப்பனுக்குப்   பிறகு மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாசிரயன் கீழைச்  சாளுக்கியரை வென்று தன்னுடைய நாட்டுடன் இணைத்திட விரும்பினார். தைலப்பனின்  நோக்கம் நிறைவேறினால் ஒன்றுபட்ட சாளுக்கியர் தனக்கு சவாலாக இருப்பார்கள் என்பதை  உணர்ந்த இராசராசன்  மேலைச் சாளுக்கிய  மன்னனின் முயற்சியை கிள்ளி விட வேண்டும் என்று முடிவு செய்தார்.  கீழைச்  சாளுக்கியர் இடையே ஏற்பட்ட வாரிசுரிமை போராட்டத்தை வாய் கொண்ட இராசராசன் அவர்களது விவகாரத்தில் தலையிட்டு இலக்கியமும் என்பவரை அரசனாக்கினார்.  அதற்கு நன்றிக்கடனாக  சடையவர்மன் சோழ மன்னரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார்.  இந்த ஏற்பாட்டை கடுமையாக எதிர்த்தார் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயன்.  இந்த எதிர்ப்பு மேலைச்சாளுக்கிய   சோழப் போருக்கு  காரணமாயிற்று.
 
 மேலைச் சாளுக்கியருக்கு எதிராக ராஜேந்திரன் தலைமையில் வலிமையான சோழர் படையை அனுப்பினார் இராசராசன்.  மேலைச் சாளுக்கியர் படை   தோற்கடிக்கப்பட்டு அவர்களுடைய தளபதி கேசவன் கைது செய்யப்பட்டார்.   சத்தியாசிரயனின்  மற்றொரு போர் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.  இப்போரின் விளைவாக துங்கபத்திரை ஆறு சோழப் பேரரசு கும் மேலைச் சாளுக்கியருக்கும் இடையேயான எல்லையானது.
 
தெலுங்க நாடு
தொண்டை நாட்டிற்கு வடக்கே நெல்லூர் வரை  கீழைச் சாளுக்கியர் ஆட்சி பரவியிருந்தது.  இராஜராஜன்,  பரமன்   மழபாடியார்  என்ற  படைத் தலைவனை பெரும் படையோடு அங்கு  அனுப்பினான்.  பீமன் என்ற அரசனை வென்று அந்நாடுகளை  சோழப் பேரரசில் சேர்த்தான்.
கீழை சாளுக்கிய போர்
கீழைச் சாளுக்கிய நாட்டில் நிலவிய வாரிசுரிமை போட்டியில் இராசராசன் தலையிட்டு சக்திவர்மனை  மன்னராகிய போதிலும் அங்கு அமைதி நிலவவில்லை சோழர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சக்திவர்மனை மேலைச் சாளுக்கிய மன்னன்  சத்தியாசிரயன் மன்னிக்கத் தயாரில்லை.  இராசராசனிடம் தோல்வியுற்ற  சத்யா சீரியல் வண்டி மீது படையெடுத்தார்.   அப்படையை இராசேந்திரன் தலைமையிலான சோழர் படை தோற்கடித்தது.  அதுமட்டுமல்ல.  சக்திவர்மனை  அடுத்து பட்டத்துக்கு வந்த விமலாதித்தனுக்கு  தன் மகள் குந்தவையை மணமுடித்து வைத்து இராசராசன் கீழை சாளுக்கியருடனான  உறவை பலப்படுத்தினார்.  இதன்மூலம்  தஞ்சைக்கும் இலங்கைக்கும் இடையேயான தொடர்பு உறுதி செய்யப்பட்டது.  இதன்பின் கீழை சாளுக்கிய   வெங்கியை தலைநகரமாகக் கொண்டு  மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர்.
 
மாலத்தீவு படையெடுப்பு
இராசராசன் படையெடுப்பு தென்னிந்தியா தாண்டி மாலத்தீவுகள் வரை சென்றன.  முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட  மாலத்தீவுகள் இராசராசனால்  கைப்பற்றப்பட்டன.  இப்படையெடுப்புக்கு  பெரிதும் காரணமாக இருந்தது இராசராசனின் வலிமைமிக்க கடற்படையகும்.  சோழர் கடற்படை ராஜராஜனுக்கு 3 மகத்தான வெற்றி பெற்றுத்தந்தது.  அவையாவன சேர கடற்படையை வெற்றி கொண்டது,  இலங்கையை கைப்பற்ற உதவியது,  மாலத்தீவு களை சோழ நாட்டுடன் சேர்த்தது.  மாலத்தீவு படையெடுப்பு இராஜராஜனின் இறுதி சாதனையாக கருதப்படுகிறது.  வெற்றிக்குப் பின் இராஜேந்திரன் முறைப்படி  யுவராஜாவாக முடிசூட்டப்பட்டார்.
 
சமயக் கொள்கை
இராஜராஜன்  சிறந்த சிவ பக்தன்.  இவன் பெயர் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் வண்ணம் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன்.  ஆனால் நாட்டில் இருந்த எல்லா சமயங்களையும்  மதித்து நடந்தான்.  நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்தான்.  தன் கீழ் இருந்த  சிற்றரசர்களுக்கும் மக்களுக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை அளித்திருந்தான்.  புதிய சிவன் கோவில்கள் பல கட்டப்பட்டன.  பாடல் பெற்ற பல கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன.
 
பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் தமிழர்  கட்டிடக்கலையின் உயர்வுக்கு சான்றாக உள்ளது.  இது “திராவிட பாணியில்”  கட்டப்பட்ட கோவிலாகும்.  இதன் பெயர் “இராஜராஜேஸ்வரம்”  என்பது இக்கோவில் 1005-ல்  கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1010-ல் நிறைவுபெற்றது.
 
கோவிலின் சிறப்புகள்
கோவிலின் விமானம் 216 அடி உயரமுடையது.  இது இந்தியாவிலேயே உயர்ந்த கோவில் விமானமாகும்.  இது   அடி பெருத்து  நுனி சிறுத்தை அமைப்புடையது.  இது “தக்காணமேரு”  என்ற அமைப்பை உடையது. உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப் பெரியது.  அதற்கு மருந்து சாத்திப்  பந்தனம் செய்வித்தபோது,  ஆவுடையார் வடிவம் பெரிதாக இருந்தால்,  மருந்து இளகி பந்தனமாகவில்லை.  அப்போது கருவூர்த்தேவர் என்னும் முனிவர் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர் புராணம் கூறுகிறது.  இக்கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது.  இதன் உயரம் 12 அடி,  நீளம் 19 1/2 அடி,  அகலம் 8 1/2.  முதலில் செய்யப்பட்ட நந்தி  சிதிலமடைந்தந்ததால் அகற்றப்பட்டது. தற்பொழுது உள்ள நந்தி நாயக்கர் காலத்தை சேர்ந்தது.
 
கோவில் உள்ளறையில் சோழர்கால மற்றும் நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன.
 
திருமுறை வகுத்தது
இராஜராஜன் தேவாரப் பாடல்களைத் திரட்டி முறைப்படுத்த விரும்பினான்.  அதற்கு தகுதியானவர் திருநறையூரில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்பதை  அறிந்து அரசன் திருநறையூர் சென்றான்.  அவரிடம் தன் எண்ணத்தை தெரிவித்தான்.  அவர்  ஏடுகள் சிதம்பரம் கோவிலில் உள்ள ஒரு அறையில் இருப்பதை  உணர்ந்தார்.  உடனே அரசன் அவருடன் சிதம்பரம் கோவிலுக்கு சென்று  தில்லைவாழ் அந்தணர்களை சந்தித்தார்.  தேவாரம் பாடிய மூவரும் வந்தால்தான் ஏடுகளை கொடுப்போம் என்று அந்தணர்கள் கூறினர்.  அரசன் அப்பர்,   சம்பந்தர்,  சுந்தரர் உருவங்களை ஊர்வலமாக வரச் செய்து,  அந்த  ஏடுகளை பெற்றான்.  1 முதல் 7 வரை திருமுறைகள் வகுக்கப்பட்டன.  திருமுறை கண்ட புராணத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.  எனினும் இதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்பது ஆய்வாளர்களின் கருத்து.  திருமுறைகளை  கோவில்களில்   ஓர ஓதுவார்கள் அமர்த்தப்பட்டனர்.  தஞ்சை பெரிய  கோவிலில் 48 ஓதுவார்கள்  நியமிக்கப்பட்டனர்.  தேவாரப் பாடல்கள் நாடெங்கும் பரவ இராஜராஜன் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி பெரிதும் போற்றத்தக்கது.
 
ராஜராஜ சோழன் ஆட்சிகாலத்து சாதனைகள்
இராசராசன் சோழ மன்னர்களின்  தலை சிறந்தவராக திகழ்ந்தார்.  அவற்றுள் முக்கியமானவை கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி என்றும் வரலாறு அறிமுகம் செய்யும் வழக்கம் இவர் காலத்தில் இருந்துதான் தொடங்கப்பட்டது,  நடுவண் அரசை மையமாகக் கொண்டு சோழ நாடு பல நிர்வாகப் பகுதிகள் பிரிக்கப்பட்டு  அதிகார   குவிமைய முடியாட்சி உருவாக்கப்பட்டது,  ஆட்சி காலத்திலேயே வாரிசு இளவரசர் பதவியை ஏற்படுத்தி  இனையாட்சி வழி வகுக்கப்பட்டது வழி வகுக்கப்பட்டது.  கிராம மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் அவற்றின் நில வருவாய் கணக்கு மத்திய தணிக்கை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டது.  சோழ நாடு முழுவதும் உள்ள நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு,  சரியாக அழைக்கப்பட்டு,  முறையான நிதி நிர்வாக கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரப்பட்டது.
 
சோழப் பேரரசின் விரிவாக்கத்திற்கும்,  பாதுகாப்புக்கும்,  பராமரிப்புக்கும்,  வெளியுறவு தொடர்புகளுக்கும் தேவையான நிலையான ராணுவத்தையும்,  பலமிக்க கடற்படையும் உருவாக்கப்பட்டன.   இராசராசன்   சிறந்த சிவபக்தராக இருந்தபோதிலும்   சமயங்களுக்கிடையே நடுநிலை  தன்மையை கடைப்பிடித்தார்.  அனைத்து சமயங்களும் சமமாக மதிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.  எடுத்துக்காட்டாக சுமத்திராவின் மன்னர்  சைலேந்திரர்  நாகப்பட்டினத்தில் ஒரு புத்தகத்தை கட்டிக்  கொள்வதற்கு அனுமதித்து  உதவியதோடன்றி  அது  செவ்வனே கட்டிமுடிக்க படுவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார்.   இராசராசன் கோவில் கட்டிடக்கலைக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இவர் காலத்தில் தஞ்சையில் கட்டப்பட்ட  பெருவுடையார் ஆலயம் இதற்கான தலைசிறந்த எடுத்துக்காட்டாகும்.  பல்கலை வல்லவரான இம்மன்னர் சிறந்த அறிஞராக இருந்ததோடு மட்டுமன்றி கலை, இலக்கிய புலவர்களுக்கு புரவலராக இருந்தார்.  இராசராசன் சாதனைகளை நினைவூட்டும் விதமாக இவர் பல பட்டங்களை சூட்டிக்கொண்டார்.  அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மும்முடிச்சோழன்,     சோழேந்திர  சிம்மன்,  சிங்களாந்தகன்,  ஜெயம்கொண்டார்,   தெலிங்க குலகாலன்,   ரவிகுல மாணிக்கன்.  சிவபாதசேகரன் ஆகியவை.